தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் @ அம்பத்தூர்


பிரதிநிதித்துவப் படம்

ஆவடி: அம்பத்தூர் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் சென்னை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார், அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் அருகே மேனாம்பேடு பகுதியில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அச்சோதனையில், ஆந்திராவுக்கு கடத்துவதற்காக 1,750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் முருக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்காக 5,250 கிலோ ரேஷன் அரிசி மாவு என, 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார், 7 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த பதுக்கல் தொடர்பாக அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சகிலா (28), அமுல் (49) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ் என்கிற ராஜசேகரை போலீஸார் தேடி வருகின்றனர்.