காஞ்சிபுரம் | அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை


பிரதிநிதித்துவப் படம்

காஞ்சிபுரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வரும் பாஸ்கர் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆற்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நில அளவைத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். காஞ்சிபுரம், ஆவடி, நாகப்பட்டனம் பகுதிகளில் பணியாற்றிவிட்டு தற்போது ஊட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பணியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆற்பாக்கம் மேட்டுக்காலனியில் உள்ள அவரது வீட்டிலும், அவரது உறவினர் ஒருவர் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஊட்டியில் பாஸ்கர் தங்கியுள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.