ஸ்ரீவில்லிபுத்தூர்: குடும்பத் தகராறில் ஒரே நாளில் இருவர் கொலை


ஸ்ரீவில்லிபுத்தூர்: குடும்பப் பிரச்சினைகள் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ஏமராஜன் (38). இவரது மனைவி கோகிலா. ஏமராஜன் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கோகிலா தனது தந்தை வீட்டிற்குச் சென்று விட்டார். இருவரையும் சேர்த்து வைப்பது குறித்து நேற்று மாலை ஏமாராஜனின் அத்தை மகன் பாண்டி என்ற பேட்டரி பாண்டி (38) என்பவர் சமாதானம் பேசியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பாண்டி ஏமராஜனை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த ஏமராஜனை உறவினர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏமராஜன், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகன் வத்திராயிருப்பு வணிக வைசியர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாமுண்டி என்ற பாலு (90). இவரது மனைவி வெயிலுகாத்தாள். இவர்களுக்கு கருப்பாயி, குரு பாக்கியம் ஆகிய இரு மகள்களும், கணேஷ்குமார் (55) என்ற மகனும் உள்ளனர். கணேஷ் குமாருக்கு திருமணமாகி இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணேஷ்குமார் சென்னையில் டிரைவர் வேலை செய்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வத்திராயிருப்பு வந்த கணேஷ்குமார், சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தந்தையுடன் பிரச்சினை செய்துள்ளார். நேற்று இரவும் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட கணேஷ்குமார், அவரை அறிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x