சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர் உட்பட 3 பேர் கைது


சென்னை: சென்னை விமான நிலைய சர்வதேச முனைய புறப்பாடு பகுதி வழியாக, விமான நிலையத்தில் உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மணிகண்டன் (28) என்பவர் கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வெளியே வருவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.

அவர் வைத்திருந்த பிளாஸ்க்கை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் ரூ.92 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் ஊழியரையும், தங்க கட்டிகளையும் விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது விசாரித்தனர். விசாரணையில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், பிளாஸ்க்கை கொடுத்து, விமான நிலையத்துக்கு வெளியில் வருகைபகுதியில் நிற்கும் ஒருவரிடம் கொடுக்க சொன்னதாக மணிகண்டன் தெரிவித்தார்.

இதையடுத்து, துபாயில் இருந்து வந்த அந்த பயணி யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் துபாயில் இருந்து விமானத்தில் வந்த 30 வயதான பயணி ஒருவரிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த 40வயதுடைய பெண் அணிந்திருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இந்த இருவரையும் கைது செய்தனர்.