வேலை வாங்கி தருவதாக பண மோசடி: முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சகோதரரின் ஜாமீன் ரத்து


சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையைச் சேர்ந்த முகமது மொஹிதீன் என்பவருக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக வேலை வாங்கி கொடுப்பதற்காக ஹூசைன் அகமது என்பவர் மூலமாக விருதுநகரைச் சேர்ந்த நல்லதம்பி என்ற விஜய நல்லதம்பி ரூ. 17 லட்சம் கேட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் பேரவைத் தலைவர் காளிமுத்துவின் சகோதரர் ஆவார்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய காலகட்டங்களில் முகமது மொஹிதீன் இரு தவணையாக ரூ. 10 லட்சத்து 40 ஆயிரத்தை நல்லதம்பியிடம் கொடுத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது விஜய நல்லதம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து முகமது மொஹிதீன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2022-ம் ஆண்டு அபிராமபுரம் போலீஸார் நல்லதம்பி மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான நல்லதம்பி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது பணத்தை திருப்பி கொடுப்பதாக அளித்தஉத்தரவாதத்தின் பேரில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் உறுதியளித்தபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதால் நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, ஜாமீன்பெற்றபோது அளித்துள்ள நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என்பதால் நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

x