விராலிமலை அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: இளைஞர் உயிரிழப்பு


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தீ விபத்துக்குள்ளான பட்டாசுக்கடை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழந்தார்.

விராலிமலை அருகே அத்திப்பள்ளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(35). இவருக்கு சொந்தமான பட்டாசு சில்லறை விற்பனை கடை அதே ஊரில் உள்ளது. இக்கடையை விரிவுபடுத்துவதற்காக வெல்டிங் இயந்திரத்தின் உதவியுன் தகர ஷெட் அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்பணியில் வேல்முருகனின் சகோதரர் கார்த்திக்ராஜா(27), விராலிமலையைச் சேர்ந்த முருகேசன், சிவா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

வெல்டிங் செய்தபோது தீப்பொறியானது பரவி, அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிவா, முருகேசன் ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.