காஞ்சியில் 2 லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு - போக்குவரத்து பாதிப்பு


காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே கனரக லாரியின் பின்புறத்தில் டாரஸ் லாரி மோதியதில் டாரஸ் லாரியின் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தால் காஞ்சிபுரம்- செங்கல்பட்டு, காஞ்சிபுரம்-தாம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பா கற்களை ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் ஒன்று காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் வெங்குடி கிராமம் வழியாகச் சென்றது. அதே மார்க்கமாக கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் நொறுங்கின.

இந்த விபத்தில் டாரஸ் லாரியின் ஓட்டுநர் வெங்குடி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் இருந்த பொன்ராஜின் சடலத்தை சுமார் ஒரு மணி நேரம் போராடி போலீஸார் மீட்டனர்.

இந்த விபத்து காஞ்சிபுரம்-வாலாஜாபாத் பகுதிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்களும், காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இது குறித்து வாலாஜாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.