பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது


சற்குருநாதன்

கடலூர்: பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மஞ்சக்குழி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சற்குருநாதன் (45). பாஜகவைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சிக்கு 2023 - 24-ம் நிதியாண்டுக்கான 15-வது திட்ட நிதிக்குழு திட்டத்தின் படி மஞ்சக்குழி கிராம ஊராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஓம் சக்தி கன்ஸ்ட்ரஷன் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப் பட்டிருந்தது.

இந்தப் பணிகளை மேற் கொண்ட பி.முட்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (33) என்பவரிடம் ஊராட்சித் தலைவர் சற்குருநாதன், இப்பணிகளை செய்தமைக்காக தனக்கு 2 சதவீதம் கமிஷனாக ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ், அவ்வளவு பணம் என்னால் ஒரே நேரத்தில் தர முடியாது என கூறியுள்ளார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதன், இரண்டு தவணைகளாக தலா ரூ.15 ஆயிரம் வீதம் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் இது பற்றி புகார் செய்துள்ளார். இதனைதொடர்ந்து, நேற்று சந்தோஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அறிவுரைப்படி, ஊராட்சி தலைவர் சற்குரு நாதனுக்கு ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கடலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, கூடுதல் காவல் கண் காணிப்பாளர் ந.தேவநாதன் தலைமையிலான போலீஸார் லஞ்ச பணம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி தலைவர் சற்குரு நாதனை கைது செய்தனர்.

மேலும் மஞ்சக்குழியில் உள்ளஅவரது வீட்டிலும் சோதனை மேற் கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங் களை கைப்பற்றினர். பின்னர் வழக்கு பதிவு கைது செய்யப்பட்ட மஞ்சக்குழி கிராம ஊராட்சி தலைவர் சற்குருநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.