ஆலங்குளம் அருகே முன்விரோத தகராறில்  இளைஞர் கொலை: போலீஸ் விசாரணை


பேச்சிகுட்டி

தென்காசி: தென்காசி அருகே பக்கத்து வீட்டுக்காரர் உடனான முன்விரோத தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்த ராசையா என்பவரது மகன் பேச்சிக்குட்டி (25). திருமணமாகாத இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பர் சண்முகையா. இவர்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளளது. இந்நிலையில், பேச்சிக்குட்டி ஞாயிறு மாலையில் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் சண்முகையா மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் இங்கு ஏன் கூட்டமாக நிற்கிறீர்கள்? என கேட்டு கண்டித்துள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்குச் சென்ற பேச்சிக்குட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த 4 பேர் கும்பல் பேச்சிகுட்டியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பேச்சிக்குட்டியை சரமாரியாக குத்திவிட்டு, உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று, உயிருக்கு பேராடிய பேச்சிக்குட்டியை மீட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தினர். பேச்சிக்குட்டி உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவ்த்தைத் தொடர்ந்து மாறாந்தையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.