சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 வங்கிகளில் கொள்ளை முயற்சி: அலார எச்சரிக்கையால் தப்பிய நகைகள்


படவிளக்கம்: சிவகங்கை அருகே கீழக்கண்டணியில் கொள்ளை முயற்சி நடந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 வங்கிகளில் திருட்டு முயற்சி நடைபெற்றது. அலாரம் ஒலித்து எச்சரித்ததால் திருடர்கள் தப்பியோடினர்.

சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு நகைக்கடன் வழங்கப்படுவதால் அடமானம் வாங்கப்பட்ட 4 கிலோ தங்க நகைகள் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் வங்கியின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து கூட்டுறவு சங்க ஊழியர்களும் போலீஸாரும் அங்கு வந்தனர். வங்கி வளாகத்தைப் போலீஸார் ஆய்வு செய்த போது, சிசிடிவி கேமரா வயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் மற்றொரு இடத்தில் இதேபோல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. மானாமதுரை அண்ணாசாலை பகுதியில் இந்தியன் வங்கி உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் வங்கி பூட்டிக் கிடந்தது.

இன்று காலை ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த லாக்கரையும் உடைக்க முயற்சி நடந்திருந்து தெரியவந்தது. இது குறித்து மானாமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

-இ.ஜெகநாதன்

x