பெரியபாளையம்: கடுகுக்காக சண்டையிட்டு கடை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மளிகை கடையை மூடிய பின்பு கடுகு கேட்டு தகராறில் ஈடுபட்டு, கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்திய மர்மக் கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன்சத்திரத்தில் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து (36) மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரத்தை முடிந்து கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாராகினர்.

அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட ஒரு கும்பல், இசக்கிமுத்துவிடம் கடுகு கேட்டுள்ளனர். அதற்கு, இசக்கி முத்து, “கடையை மூடிவிட்டோம் காலையில் வாருங்கள்” என சொல்லி இருக்கிறார். இதை ஏற்க மறுத்த அந்தக் கும்பல், “நாங்கள் யார் தெரியுமா?” என்று கேட்டு இசக்கிமுத்து மற்றும் அவரின் சித்தப்பா மகன் ஜோதிலிங்கம் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி இருக்கிறது.

சம்பவம் குறித்து அறிந்து கடை அருகே திரண்ட பொதுமக்கள் சிலர், காயமடைந்து கீழே விழுந்து கிடந்த இசக்கிமுத்து, ஜோதிலிங்கத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.