போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற பெண் கைது


சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற பெண் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயல்வதாக குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பிரிவு அதிகாரிகள் நேற்று விமான நிலையம் வந்த பயணிகள் அனைவரையும் சோதித்தனர்.

குறிப்பாக பாஸ்போர்ட் விவரங்களை சேகரித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்ல இருந்த பயணியை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதை அடுத்து அவரது பாஸ்போர்ட் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய பாஸ்போர்ட்டை போலியாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த போலீஸாரால் தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட பெண் இலங்கையை சேர்ந்த சங்கீதா (29) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை குடியுரிமை அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து அவரது ஒன்பது வயது மகன் மற்றும் 6 வயது மகளை திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள சங்கீதாவின் தாயாரிடம் ஒப்படைத்தனர். அது மட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்ட இலங்கை பெண் சங்கீதா தெலங்கானா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.