திருப்பத்தூர் | டிஜிட்டல் கைது எனக் கூறி நூதனமாக பணம் பறிப்பு: எஸ்.பி. எச்சரிக்கை


கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் | கோப்புப் படம்

திருப்பத்தூர்: தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் கைது எனக் கூறி மோசடியாக பணம் பறிக்க முயல்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோசடி செய்யும் கும்பல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பணத்தை பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, குற்றம் சாட்டப்பட்டதாக கூறி போலி காவல் அதிகாரி போல தொலைபேசி அல்லது வாட்ஸ் - அப் அழைப்பு மூலம் மிரட்டல் விடுப்பார்கள்.

போதைப் பொருள் வழக்கு, பண மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை அச்சுறுத்துவார்கள். மேலும், டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவீர்கள் என்றும், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் போன்ற பொய்யான தகவல்களை கூறி பணம் செலுத்துமாறு வற்புறுத்துவார்கள். உண்மையில் இந்திய காவல்துறை இது போன்ற டிஜிட்டல் கைது முறையை கடைபிடிப்பதில்லை.

குற்றம் சாட்டப்பட்டால் முறையான கைது நடமுறைகளை கடைபிடித்து காவல் நிலையத்துக்கு வரவழைப்பார்கள். எனவே, இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் நீங்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம். காவல்துறையினர் எந்தவித பணப்பரிவர்த்தனையையும் ‘ஆன்லைனில்’ கேட்பதில்லை.

அத்தகைய அழைப்புகளை பெறுபவர்கள் உடனடியாக சைபர் குற்றப் பிரிவு எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். மேலும், தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையம் அல்லது சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.