கடலூர்: மத்திய சிறையில் இரண்டு கைதிகளுக்கு இடையே மோதல்!


கடலூர் மத்திய சிறையில் இரண்டு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அழகு முத்து என்பவரும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த ஒரு வருடமாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறைக் காவலர்கள் அங்கு சென்று இருவரையும் விலக்கி விட்டனர். இதன் பின்னர் இருவரையும் தனித்தனி அறையில் காவலர்கள் அடைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறைக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.