பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.21 லட்சம் மோசடி!


பொதுப்பணித்துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி விளாத்திகுளம் முதியவரிடம் ரூ.3.21 லட்சத்தை மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த நபரை தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் செல்போனுக்கு 9080575307 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தனது பெயர் மோகன்ராஜ் என்று கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர் தொடர்ந்து பேசிய அந்த நபர், முதியவரின் மகனுக்கு பொதுப்பணித்துறையில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய முதியவர், அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.3.21 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர் கூறியபடி முதியவரின் மகனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் தேசிய சைபர் க்ரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாருக்கு மாவட்ட எஸ்பி-யான எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மதுரை கே.கே.நகர் சுப்பையா காலனியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைக்கண்ணு (43) என்பவர் விளாத்திகுளம் முதியவரிடம் மோகன்ராஜ் என கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் போலீசார் நேற்று மதுரை வஃக்போர்டு கல்லூரி அருகே வைத்து பிச்சைக்கண்ணுவை கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.