தமிழகம் முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ‘ராடுமேன்’ மூர்த்தி கைது


கோவை: தமிழகம் முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ‘ராடுமேன்’ எனப்படும் மூர்த்தி உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளில், இரும்பு ராடை பயன்படுத்தி வீடுகளில் நுழைந்தும், பூட்டிய வீட்டை உடைத்தும் பணம், நகை திருடப்படும், கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் நடந்தன.

இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் ஸ்டாலின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே பாணியில் திருட்டு சம்பவங்கள் நடந்திருந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான உருவங்கள், அதில் இருந்த ஒற்றுமை உள்ளிட்டவற்றை வைத்து குற்றவாளியின் உருவத்தை ஓவியமாக வரைந்தனர். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு இவ்வழக்கில் தொடர்பிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸார் பிடித்தனர்.

ராடுமேன் மூர்த்தி: விசாரணையில் மூர்த்தி ‘ராடுமேன்’ எனப்படும் முக்கிய கொள்ளையன் எனத் தெரியவந்தது. அவருடன் சேர்த்து மொத்தம் 7 பேர் மேற்கண்ட வகைகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ‘‘இவ்வழக்கு தொடர்பாக மூர்த்தி, தேனியைச் சேர்ந்த அம்சராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு என 18 இடங்களிலும், மாநிலம் முழுவதும் சேர்த்து 68-க்கும் மேற்பட்ட இடங்களிலும் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். தோராயமாக 1,500 பவுன் நகைகள், ரூ.1.76 கோடி பணம் ஆகியவற்றை இவர்கள் திருடியுள்ளனர். கோவை மாநகரில் மட்டும் 376 பவுன் நகைகளை திருடியுள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தில் மூர்த்தி ராஜபாளையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில்லும், விருதுநகரில் 53 சென்ட் நிலத்தையும் வாங்கியுள்ளார். மூர்த்தியிடம் இருந்து 63 பவுன் நகை, 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

தொடர் திருட்டு: போலீஸார் கூறும்போது,‘‘கடந்த 2020-ம் ஆண்டு மூர்த்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரே மாதிரியான இரும்புக் கம்பி, முழுக்கை சட்டை உள்ளிட்டவற்றை குற்றத்துக்கு பயன்படுத்தியுள்ளார். வாகனங்கள் குறைவாக உள்ள வீடுகள் மற்றும் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மூர்த்தியின் மனைவி, அவரது கூட்டாளி சுரேஷ் ஆகியோரை ராஜபாளையம் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ், ஒரு பெண் என 4 பேரிடம் கொடுத்து பணமாக மாற்றியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மனோஜ்குமார், சுதாகர், ஓம்பிரகாஷ், பிரகாஷ் ஆகிய நால்வரையும் தேடி வருகிறோம்’’ என்றனர்.