பேசின்பாலம் பணிமனையில் நிறுத்தப்பட்ட ரயிலில் ஆண் சடலம்: ரயில்வே போலீஸார் விசாரணை @ சென்னை


கோப்புப்படம்

சென்னை: சென்னை பேசின் பாலம் யார்டில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட கங்கா காவேரி விரைவு ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலம் சாப்ரா நகரில் இருந்து வாரணாசி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கங்கா காவேரி விரைவு ரயில் கடந்த 15-ம் தேதி வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்ற பிறகு, ரயில் அத்திப்பட்டு யார்டுக்கு சென்றது. அங்கே மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த இந்த விரைவு ரயில், பராமரிப்பு பணிக்காக, சனிக்கிழமை பேசின்பாலம் யார்டுக்கு வந்தது.

அங்கு அந்த ரயிலை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, முன்பதிவு இல்லாத பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சற்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக, இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே போலீஸார், இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபரின் பையை சோதித்தபோது , வாரணாசி - சென்னை சென்ட்ரல் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட் இருந்தது. அந்த நபர் காவி வேட்டி, லேசான பச்சை நிற சட்டை அணிந்திருந்தார். எனவே, அவர் காசிக்கு சென்று திரும்பி இருப்பார் என்று போலீஸார் சந்தேககின்றனர். இறந்த நபர் யார்? மர்ம நபரால் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.