சென்னை | சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஒருவருக்கு வாழ்நாள் சிறை; மற்றொருவருக்கு 20 ஆண்டு தண்டனை


சென்னை: சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இருவரில் ஒருவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதான இளைஞர், 23 வயதான தனது நண்பருடன் வீட்டில் இருவரும் போதையில் படுத்து தூங்குவது வழக்கம்.

கடந்த 2021-ம் ஆண்டு இவர்களுடன் 23 வயது இளைஞரின் தம்பியான சிறுவனும் ஒன்றாக படுத்துள்ளார் அதே வீட்டில் தங்கியுள்ளார்.அப்போது இருவரும் சேர்ந்து அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. தண்டனை விவரம் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 35 வயதான நபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவரின் சகோதரரான மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.