ஆவடி | ராணுவ வீரர் கொலை: மனைவி கைது


ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் வேளாங்கண்ணிதாஸ் (38). இவர், ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படைப்பிரிவில் நாயக்காக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மே 10-ம் தேதி இரவு மிகுதியாக மது அருந்திவிட்டு, வீட்டின் படுக்கை அறையில் சுயநினைவின்றி கிடந்ததாக கூறி வேளாங்கண்ணிதாஸை அவர் மனைவி லீமாரோஸ்மேரி(36) ஆவடி- ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக முத்தாபுது பேட்டை போலீஸார் சந்தேக உயிரிழப்பு என, வழக்குப் பதிவு செய்தனர். வேளாங்கண்ணிதாஸ் நாள்தோறும் மதுஅருந்திவிட்டு வந்து, லீமாரோஸ் மேரியிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும்லீமாரோஸ்மேரியின் பெற்றோரை அவதூறாக பேசிவந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த லிமாரோஸ், மே 10-ம் தேதி இரவு, மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த வேளாங்கண்ணிதாஸை, புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்றுவிசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக உயிரிழப்பு வழக்கை கொலைவழக்காக பதிவு செய்த முத்தாபுதுப்பேட்டை போலீஸார், நேற்று முன் தினம் லீமாரோஸ்மேரியை கைது செய்தனர்.