தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட 402 பச்சோந்திகள்: சென்னையை சேர்ந்த இளைஞர் கைது


சென்னை: சென்னை விமான நிலையத்தில் 402 பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் 2 அட்டைப் பெட்டிகளுடன் வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் கொண்டு வந்த பெட்டிகளைத் திறந்து சோதனை செய்தனர். அதில், 402 ஆப்பிரிக்க பச்சோந்திகள் பச்சை, நீலம், மஞ்சள் நிறங்களில் இருந்தன. அதில் 67 பச்சோந்திகள் இறந்து கிடந்தன.

இதையடுத்து அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரினக் காப்பகம் குற்றப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து அதிகாரிகள் விமான நிலையம் வந்து விசாரணை நடத்தியதில், முறையான ஆவணங்கள் இல்லாமல் பச்சோந்திகளை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உயிரிழந்த 67 பச்சோந்திகளை அகற்றிவிட்டு, மீதம் இருந்த 335 பச்சோந்திகளை அட்டைப் பெட்டிகளில் வைத்து அதே விமானத்தில் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கான முழு செலவு தொகையும் அந்தப் பயணியிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. பச்சோந்திகளை கடத்தி வந்த குற்றத்துக்காக அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.