மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை... ரயில்வே காவல்துறை எச்சரிக்கை!


மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ என்ற பெயரில் மோதல் போக்கு அவ்வப்போது ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக கல்லூரிகளுக்கு சென்று ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் மாணவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படாமல் இருக்க ரயில்வே போலீஸார், ஆர்பிஎஃப் போலீஸாரின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்களில் படியில் தொங்கியப்படி பயணம் செய்வது, மொபைல் போன் பேசிக் கொண்டே ரயில் பாதையை கடப்பது, ரயில் பெட்டி மேல் ஏறுவது, ரயில் இன்ஜின் முன்பு சென்று ‘செல்ஃபி’ எடுப்போர் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ரமேஷ் கூறியதாவது, “பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பொது இடங்களில் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது. மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலைத் தடுக்க சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம், பெற்றோர்கள் வாயிலாக தொடர்ந்து அறிவுரை வழங்கி எச்சரித்து வருகிறோம். தொடர்ந்து மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடற்கரை, சென்ட்ரல், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, மாம்பலம், தாம்பரம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 4 முதல் 6 போலீஸார் வரை பணியில் இருப்பார்கள். பயணியருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதோடு, விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டப்படி 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் தேவையற்ற அசம்பாவிதங்களில் ஈடுபட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.