வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை... பழிக்கு பழியாக நடந்த அதிர்ச்சி சம்பவம்!


திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். வினோத் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், போலீஸார் இவரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக வகைப்படுத்தி இருந்தனர். கடந்த 2020ம் ஆண்டு சுள்ளான் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார்.


அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததால், திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்து செல்வதற்காக நேற்று மாலை வினோத் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவரது தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு திடீரென நுழைந்த 3 மர்ம நபர்கள், வினோத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த வினோத் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வினோத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திண்டுக்கல்லில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடப்பட்டி பகுதியில் பாண்டி என்ற கூலித்தொழிலாளி மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொருவர் முன்பகையில் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.