கடையநல்லூர் வியாபாரிகளிடம் கோடிக்கணக்கில் நகை மோசடி: திமுக கவுன்சிலரின் மகன் கைது


கைதான முகம்மது இப்ராஹிம்

தென்காசி: கடையநல்லூரைச் சேர்ந்த திமுக கவுன்சிலரின் மகனான இப்ராஹிம் என்பவர் வியாபாரிகளிடம் நகை வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல், அதற்கான பணத்தையும் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், ரகுமானியாபுரத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி (34). இவர், கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகே நகைக் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம், தில்லை அரசன், சங்கரசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் பங்குதாரர்களாக சேர்ந்து கடையநல்லூர் பேட்டை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் முகம்மது இப்ராஹிம் வியாபாரத்தை கவனித்துக்கொள்வாராம்.

இந்நிலையில், முகம்மது இப்ராஹிம் நகைகளை கொள்முதல் செய்யாமல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, அப்பகுதியில் உள்ள மற்ற நகைக் கடைகளில் இருந்து மாடல் நகைகளை வாடிக்கையாளர்களிடம் காட்டி வருவதாக கூறி வாங்கிச் செல்வது வழக்கம். அந்த நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டால் அதற்கான பணத்தை அன்றைய தினமே கொடுத்துவிடுவது வழக்கம். அதனால் அவர் கேட்கும்போதெல்லாம் நகைகளை மற்ற கடைக்காரர்கள் கொடுத்துள்ளனர்.

அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி செய்யது அலி கடையில் இருந்தபோது, அங்கு வந்த முகம்மது இப்ராஹிம், ரூ.7,92,000 ரூபாய் மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள 2 தங்க நெக்லஸ், ஒரு மாலை, 10 ஜோடி கம்மல், 10 மோதிரம் ஆகியவற்றை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால் நகையை விற்பனை செய்து, பணத்தை கொடுக்கவில்லை. நகையையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, வாடிக்கையாளர்களுக்கு நகைகளை விற்று விட்டதாகவும், மறு நாள் பக்ரீத் பண்டிகை என்பதால் கடையை முன்கூட்டியே பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகவும், பக்ரீத் பண்டிகை முடிந்த மறுநாள் நகைகளுக்கு உரிய பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, பக்ரீத் பண்டிகைக்கு மறு தினம் முகம்மது இப்ராஹிமை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையும் பூட்டி கிடந்துள்ளது. பல முறை முயன்றும் முகம்மது இப்ராஹிமை தொடர்புகொள்ள முடியவில்லை.

சில நாட்கள் கழித்து முகம்மது இப்ராஹிம் குறித்து விசாரித்தபோது அவர் நகைகளை வாங்கும் மற்ற கடைகளில் இருந்து சுமார் 1.32 கோடி மதிப்பிலான ஒரு கிலோ 847 கிராம் நகைகளை வாங்கிக்கொண்டு, நகையையும் கொடுக்காமல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், கடை அபிவிருத்திக்காக சம்சுதீன் என்பவரிடம் இருந்து ரூ.60 லட்சம் கடன் வாங்கி, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் செய்யது அலி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முகம்மது இப்ராஹிமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முகம்மது இப்ராஹிமின் தந்தை திவான் மைதீன் கடையநல்லூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

தாயார் பீரம்மாள் தற்போது திமுக கவுன்சிலராக உள்ளார். முகம்மது இப்ராஹிம் மோசடி செய்த நகை, பணத்தை என்ன செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி, கண்டுபிடிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.