பிஹாரில் சோகம்: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு


பாட்னா: பிஹாரில் 6 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஹார் மாநிலம் ஜெகனாபாத், மாதேபுரா, கிழக்கு சம்பரன், ரோஹ்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ‘ஜெகனாபாத் மாவட்டத்தில் மூன்று பேர், மாதேபுராவில் இரண்டு பேர், கிழக்கு சம்பரன், ரோஹ்தாஸ், சரண், சுபால் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். மழை பெய்யும் சமயங்களில், பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.