தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி கொலை; அதிர்ச்சியில் மக்கள்


கொலை செய்யப்பட்ட பாண்டி (39)

திண்டுக்கல் நகரப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. மது மற்றும் கஞ்சா போதையில் இளைஞர்கள் அவ்வப்போது சாலைகளில், வாகனங்களில் செல்வோர் மீதும், நடந்து செல்வோரை தாக்கும் சம்பவங்களும் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. போலீஸார் ரோந்துப்பணிகளை அதிகரித்து, இது போன்ற இளைஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் வேடப்பட்டி சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர், திருமலைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி (39) என்பது தெரியவந்தது. நேற்றிரவு பாண்டி அவரது நண்பர்களுடன் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்த தகராறில், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு உடன் இருந்த நபர்கள் தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாண்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸார், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.