பொன்னேரி | 39 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு


பொன்னேரி: மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு பகுதியில் பட்டப் பகலில் மாடி வழியே குதித்து வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் திருடிய மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு-பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அரிமுத்து(65). வெல்டரான இவர், சென்னை- மணலியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் (60), மீஞ்சூரில் பழைய துணிகளை சேகரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்,நேற்று முன் தினம் காலை கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தங்கள் கடைகளுக்கு சென்றனர். அவர்கள் பணி முடிந்து இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் நகைகள், ரூ.4.50 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுமனை பத்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும், மர்ம நபர்கள் மாடி வழியே வீட்டுக்குள் குதித்து திருடியது மட்டுமல்லாமல், சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள மீஞ்சூர் போலீஸார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.