பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு: ரவுடியை கொலை செய்யச் சென்ற கும்பலை கைது செய்த போலீஸார்


சென்னை: சென்னையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை கொலை செய்யச் சென்ற கும்பல் ஒன்று வாகனச் சோதனையின் போது போலீஸாரிடம் சிக்கியது.

சென்னை பேசின் மேம்பாலம் அருகே நேற்று (வியாழக்கிழமை) இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்‌. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை நடத்திய போது ஆட்டோவில் மூன்று கத்திகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ஆட்டோவில் வந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் அயனாவரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி சிவசங்கர் (30), மயிலாப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜித் (26) என்பது தெரிய வந்தது. மேலும், ரவுடி சிவசங்கருடன் வந்த உடுக்கை அருண், கரிமா, பாலாஜி, மதன், உட்பட ஐந்து பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகரைச் சேர்ந்த ஜோயல் (30) என்பவரின் உறவினர் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று‌ அதே பகுதியில் நடைபெற்றது. அந்த விழாவில் பால் நரேந்திரன் தரப்பினருக்கும் ஜோயல் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஜோயல் கத்தியால் பால நரேந்திரன் கையை வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ரவுடி ஜோயல், பால நரேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதும் அதன்படி நேற்று ரவுடி சிவசங்கர் தலைமையில் எட்டு பேர் கொண்ட கும்பல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் உள்ள பால நரேந்திரனை கொலை செய்யச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து பேசின் பாலம் போலீசார் கைதான ரவுடி சிவசங்கரை அயனாவரம் காவல் நிலையத்திலும் ஆட்டோ ஓட்டுநர் அஜித் மற்றும் 17 வயது சிறுவனை ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் தப்பி ஓடிய ஜோயல் மற்றும் அவனது கூட்டாளிகளான உடுக்கை அருண், பாலாஜி, மதன், உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.