பொள்ளாச்சியில் போதை ஊசி விற்றவர் கைது: 300 போதை மருந்து குப்பிகள் பறிமுதல்


பாஸ்கர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இளைஞர்களுக்கு போதை ஊசிகளை விற்பனை செய்தவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து 300 போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழைய குற்றவாளிகளின் தற்போதை நடவடிக்கைளையும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு பழைய குற்றவாளி ஒருவர் நகரப் பகுதியில் போதை ஊசிகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் எஸ்.ஐ., சிலம்பரசன் மற்றும் போலீஸார் நேற்று பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்கின்ற சுதாகாரன் (45) என்பதும், பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை சோதனையிட்டதில் அதில் பிளாஸ்டிக் டப்பாவில் 300 போதை மருந்து குப்பிகள் மற்றும் ஊசி, சிரிஞ்ச் ஆகியன இருப்பது தெரியவந்தது.

பாஸ்கர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து போதை ஊசிகளை வாங்கி வந்து பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் பாஸ்கரன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை மருந்து குப்பிகள், ஊசி, சிரிஞ்ச், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பழைய குற்றவாளியான இவர் மீது போதை ஊசிகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.