கோவை நகை வியாபாரியிடம் கொள்ளை: மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர் கைது


திருப்பூர்: கோவையில் நகை தயாரித்து விற்றுவந்த நகை வியாபாரியிடம் நகை மற்றும் பணத்தை ரயிலில் வழிப்பறி செய்த வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேரை, திருப்பூர் ரயில்வே போலீஸார் இன்று (ஜூலை 2) கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (40). இவர் கோவை பாரதி விலாஸ் சாமி ஐயர் வீதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்ட்டு வருகிறார். கடைகளுக்கு நகை செய்து கொடுத்து வரும் சுபாஷ், ஜூன் 16ம் தேதி தனது நண்பர்களுடன் பெங்களூரூ சென்று, நகைகளை கொடுத்துவிட்டு தங்கக் கட்டிகளையும் நகைகள் விற்ற பணத்தையும் எடுத்துக் கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில்,பெங்களூரூவில் இருந்து கோவைக்கு வந்துள்ளார்.

வழியில் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று மீண்டும் புறப்படும் சமயத்தில், சுமார் 20 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர், ரயிலில் ஏறி சுபாஷின் பையை திருடிச் சென்றனர். இது தொடர்பாக சுபாஷ், திருப்பூர் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீஸார், கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர்.

தனிப்படை போலீஸார் திருப்பூர் ரயில் நிலையம் மட்டுமல்லாது கோவை,ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற ரயில் நிலையங்கள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள், கடைகள் என 300 கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். கிட்டத்தட்ட 400 மணி நேர ஆய்வுக்குப் பின் குற்றவாளிகளை கண்டறிந்தனர். கொள்ளையர்களின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வந்த போலீஸார், இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வன்பனி சாவன் (22), விஜய் குண்டாலி (20), அமர்பாரத் (20), அன்கீத் சுபாஷ் (23), சைதன்யா விஜய் (20) மற்றும் கவுரவ் மாரூதி (19) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 595.14 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.10 லட்சத்து 10 ஆயிரத்து 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய விலை உயர்ந்த அலைபேசியையையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், வெகு நாட்களாக நோட்டமிட்டு நகை வியாபாரி சுபாஷிடம் திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர்.