ராசிபுரம் அருகே நாய், பூனைக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம்: போலீஸ் விசாரணை


நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட தச்சங்காடு கிராமம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாய், பூனைகளுக்கு சில்லி சிக்கனில் குருணை மருந்தை (பூச்சி மருந்து) கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழந்தணிப்பட்டி அருகே தச்சங்காடு பகுதி உள்ளது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் குமரவேல் என்பவர் தனக்கு சொந்தமான 3 வயது நாயை சங்கிலியால் தனது வீட்டின் முன்பு கட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் குமரவேல் என்பவரின் வீட்டுக்கு முன்பு கட்டி இருந்த நாயைச் சுற்றிலும் குருணை மருந்து கலந்த சில்லி சிக்கனை உணவாக போட்டுள்ளனர். இதனை சாப்பிட்ட மூன்று வயதான நாய் துடிதுடித்து இறந்தது.

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இரண்டு பூனைகளும் குருணை மருந்து கலந்த சில்லி சிக்கனை சாப்பிட்டு உயிரிழந்தது. இந்த சாலையில் சிறுவர்கள் பலரும் விளையாடி வரும் நிலையில், இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அப்போது தான் இறந்த நாயை அடக்கம் செய்வோம் எனக் கூறி வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் செய்தனர்.

இச்சம்வம் குறித்து வெண்ணந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய், பூனைக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.