திருவள்ளூர் | கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது: 26 கார்கள் பறிமுதல்


திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவரிடம் திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் (30) என்பவர் கடந்த ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்த அடிப்படையில் ஒரு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மனோஜ் பிரபாகர் வாடகையையும் கொடுக்காமல், காரையும் திரும்பக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து, மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில், மப்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த மனோஜ் பிரபாகரை, திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அடங்கிய தனிப்படை குழுவினர், மனோஜ் பிரபாகரை கைது செய்தனர்.

மனோஜ் பிரபாகரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மனோஜ் பிரபாகர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணிகண்டன் உட்பட 58 பேரிடம் கார்களை வாடகைக்கு பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீஸார் மனோஜ் பிரபாகரிடம் இருந்து, ரூ.2.53 கோடி மதிப்பிலான 26 கார்களை பறிமுதல் செய்தனர்.