பங்குசந்தை வர்த்தகர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை - பணம் திருட்டு: முன்னாள் கார் ஓட்டுநரிடம் விசாரணை


சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பங்கு சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடு போனது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த வீட்டின் முன்னாள் கார் ஓட்டுநரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எம்.ஆர். சி நகர் சத்திய தேவ் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவரது செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27-ம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான அவரது நடத்தையை சந்தேகித்து, வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை. இதையடுத்து வீட்டு லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்த 250 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள், 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணியாற்றிய சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக சரவணனை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.