சென்னை | மது குடித்ததை கண்டித்ததால் தொழிலாளி கொலை: உறவினர் கைது


சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனி (50). இவரது அக்காள் மகள் அனிதாவை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் 9-வது தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் திருமணம் செய்துள்ளார்.

பிரசாந்த் சரியாக வேலைக்குச் செல்லாமல், மது அருந்திக் கொண்டு ஊதாரித்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தன் மனைவி அனிதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையறிந்த பழனி, அண்மையில் பிரசாந்தைக் கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் பழனி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் இருக்கும் போது அங்கு மதுபோதையுடன் பிரசாந்த் வந்துள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

வாக்குவாதம் முற்றவே பழனியை பிரசாந்த் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த பழனி அங்கேயே மயங்கினார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பழனியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பழனி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக தப்பியோடிய பிரசாந்தை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரசாந்த் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.