சென்னை | 14 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்: ஜோதிடர் உட்பட 3 பேர் கைது


சென்னை: 14 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஜோதிடர் உட்பட 3 பேரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், தந்தை மற்றும் 17 வயது சகோதரனுடன் வசித்து வருகிறார். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாயார் தனியாக பிரிந்து சென்று விட்டார்.

தந்தை தொழில் விவகாரம் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம். அப்போது, மகன்கள் இருவரையும் உறவினர் ஒருவரது வீட்டில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், 14 வயது சிறுவன் அவரது தாயார் வசிக்கும் இடத்துக்கு அண்மையில் சென்றபோது, தந்தை விட்டுச் சென்ற உறவினர் வீட்டுக்கு வந்த ஜோதிடர் உட்பட 3 பேர் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாயார் இதுகுறித்து வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஜோதிடரான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஹரீஷ் (38), அவரது நண்பர்கள் ஜெயக்குமார் (30), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (41) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.