தியாகராய நகர் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு: வடமாநில தொழிலாளி கைது


சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள கோயிலில் 20 பவுன் நகையைத் திருடிய வட மாநில தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் ஹயக்ரீவர் கோயில் உள்ளது. கடந்த மாதம் 19-ம் தேதி காலையில் வழக்கம்போல் அர்ச்சகர் கோயில் நடையைத் திறந்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். அப்போது சுவாமி சிலையில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினகர் திரிபாதி, சுவாமி கழுத்தில் இருந்த 20 பவுன் நகையைத் திருடியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தினகர் திரிபாதியைத் தேடி வந்தனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பதுங்கி இருந்த திரிபாதியை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து. ரூ. 4.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.