கோரமண்டல் ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞர் கைது


கோரமண்டல் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்க இளைஞர் ராணா மண்டல்.

சென்னை: ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயிலில், கஞ்சா கடத்திய மேற்குவங்க மாநில இளைஞரை ரயில்வே போஸீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ரயில்வே போலீஸார் நேற்று மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. அதிலிருந்து இறங்கிச் சென்ற பயணிகளை போலீஸார் கண்காணித்தனர்.

அதில், ஒரு பயணி மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை மறித்து சோதித்த போது, அவரது பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், அவர், மேற்கு வங்கம் மாநிலம் முர்ஜிதபாத் பகுதியைச் சேர்ந்த ராணா மண்டல் (25) என்பதும், ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும், இதை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.20 லட்சம் ஆகும்.

இதையடுத்து, அவர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.