கோவளம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு 


கேளம்பாக்கம்: சென்னை கோவளத்தில் நெடுச்சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரின் கதவு தானாக திறந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லால் பாஷா (27). இவர் கேளம்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியபடி படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் (19) என்பவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.இ. கணினி அறிவியல் படித்து வந்தார். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்குச் சென்றுவிட்டு இருவரும் இருசக்கரவாகனத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தங்களது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோவளத்துக்கும் கேளம்பாக்கத்துக்கும் இடையே பக்கிங்காம் கால்வாய் அருகே அவர்கள் வந்தபோது எதிரே வந்த கார் ஒன்றின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் இருவரும் வந்த இருசக்கர வாகனம் கார் கதவின் மீது மோதியதில் அவர்கள் நிலை குலைந்து கீழே விழுந்தனர்.

அப்போது காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறியதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.