கொலை செய்ய திட்டமிட்டு துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடிகள் 4 பேர் கைது @ கோவை


கோவை: கோவை செல்வபுரம் போலீஸார், சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, இன்று (ஜூன் 24) மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தி்ல் 4 பேர் வந்தனர். அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர்.

விசாரணையி்ல் பிடிபட்டவர்கள் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய்குமார்(24), தீ்த்திபாளையத்தைச் சேர்ந்த ஜலாலுதீன்(50), இடையர்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார்(40), செல்வபுரத்தைச் சேர்ந்த சல்புல்கான்(40) எனத் தெரிந்தது. இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,‘‘பிடிபட்ட நால்வரும் ரவுடி சஞ்சய்ராஜாவின் கும்பலைச் சேர்ந்தவர்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இவர்கள் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது” என்றனர்.