தூத்துக்குடி அருகே கார் மோதியதில் 3 பெண்கள் உயிரிழப்பு: தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்


பார்வதி, நட்டார் சாந்தி, அமராவதி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், ஆத்தூர் அருகே உள்ளமுக்காணி கிராமத்தில் சாலையோரம் இரண்டு குடிநீர் குழாய்கள் உள்ளன. நேற்று காலை 6.30 மணியளவில் இந்த குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிவேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த பலவேசம் மனைவி நட்டார் சாந்தி (50), சித்திரைவேல் மனைவிஅமராவதி (58), ராஜ்குமார் மனைவி பார்வதி (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த சுந்தரம் மனைவி சண்முகத்தாய்(55) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பர்களுடன் பெங்களூரு சென்றுவிட்டு, தூத்துக்குடி திரும்பியபோது விபத்து நேரிட்டுள்ளது. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முக்காணி கிராமத்தில் தெருக் குழாயில்தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சண்முகத்தாய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம்முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.