பேராசிரியை நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு


மதுரை: கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி. தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டில் தன்னிடம் படித்த மாணவிகளைப் பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தும், பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு தொடர்பாக 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வழக்கு முழுவதுமே வீடியோ விசாரணை போலவே இருந்தது. சாட்சிகள் முழுமையாக கவனிக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து, மனுதாரரின் தண்டனையை நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது. விசாரணை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.