பேக்கரி வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை: மூவர் கைது; இருவர் தலைமறைவு @ திருப்பூர்


கொலை செய்யப்பட்ட பனியன் நிறுவன தொழிலாளி சதிஷ்குமார்

திருப்பூர்: திருப்பூர் அருகே பேக்கரி வாசில் பனியன் நிறுவன தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). பனியன் நிறுவன தொழிலாளி. நேற்று மாலை சதீஷ்குமார் வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் தேநீர் சாப்பிட்டு விட்டு, வெளியே அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரை சுற்றி வளைத்து அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணையை துவங்கி உள்ளனர். முதல் கட்டமாக, திருப்பூர் கோல்டன் நகரின் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி, அதில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொலையாளிகளைக் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய பாலா (எ) பாலகிருஷ்ணன், சக்தி சண்முகம் மற்றும் பாண்டியராஜன் ஆகிய 3 பேர் இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, கொலைக்கு சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் இருவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களும் சிக்கினால் தான் கொலைகான உண்மையான காரணம் தெரியவரும் என காவலர்கள் கூறினர்.