பரோலில் வந்து தலைமறைவான ரவுடி கர்ணா மீண்டும் சிறையில் அடைப்பு


ர்வடி கர்ணாவுடன் புதுச்சேரி சிறப்பு படை போலீஸ்

புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் இருந்து பரோலில் வெளி வந்து தலைமறைவாகிய ரவு கர்ணா, நேற்று கோவையில் கைது செய்யப்பட்டு, இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுவை முத்தியால்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி கர்ணா. இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்தார். நன்னடத்தை விதிப்படி தனக்கு விடுதலை கோரி கர்ணா மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், அவர் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார். ஏற்கெனவே 33 முறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் இம்முறையும் அவருக்கு 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த 13-ம் தேதி மீண்டும் சிறைக்கு வர வேண்டிய கர்ணா, அதன்படி திரும்பவில்லை. இதையடுத்தது முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணையில், கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. உடனஏ, அவரை தேடப்படும் குற்றவாளியாக புதுவை காவல்துறை அறிவித்தது இந்நிலையில், அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமான 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவையில் இருந்த ரவுடி கர்ணாவை புதுச்சேரி சிறப்பு படை போலீஸார் தலைமறைவான 4 நாட்களுக்கு பிறகு நேற்று கைது செய்தனர். தொடர்ந்து கர்ணாவை இன்று அதிகாலை புதுச்சேரிக்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.