காஞ்சிபுரம் பகுதியில் 2.4 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் இன்று (ஜூன் 18-ல்) கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டு ஒலிமுகமதுபேட்டை பகுதியில் காஞ்சிபுரம்-வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் முஸ்தபா(26) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அப்பளத் தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் அவரிடம் கஞ்சா வாங்குவதாகவும் காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா வாங்குபவர்கள் போல் சென்ற போலீஸார் முஸ்தபாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நலீம்கான் என்பவருடன் ஆந்திர மாநிலம் ஓ.ஜி.குப்பம் பகுதிக்குச் சென்று 2.4 கிலோ கஞ்சா வாங்கி வந்துள்ளது தெரியவந்தது. அதனை இருவரும் பிரித்துக் கொண்டு சிறு பாக்கெட்டுகளில் போட்டு விற்பனை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்தபா வீட்டில் இருந்த 1.2 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், நலீம்கான் வீட்டில் நடத்திய சோதனையில் அங்கிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முஸ்தபா, நலீம்கான் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.