ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவதில் தகராறு: டிரைவர் அடித்துக் கொலை


பிரதிநிதித்துவப் படம்

உடுமலை: உடுமலைப்பேட்டை அருகே, ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவது தொடர்பான தகராறில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை மற்றுமொரு ஓட்டுநர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்தார். இவருக்கும் மற்றுமொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ராஜ்குமார் என்பருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சரவணன் குறிச்சிக் கோட்டையிலுள்ள டாஸ்மார்க் கடை அருகே வந்தபோது அங்கிருந்த ராஜ்குமார் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றிப்போன நிலையில், ராஜ்குமார் தான் வைத்திருந்த சுத்தியை எடுத்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரவணனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றிய தளி போலீஸார், கொலையாளியான ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.