உதகையில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் கைது 


உதகை: உதகையில் 15 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின் 15 வயது மகன் உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக அந்த மாணவன் சென்றார். அவர் குளித்துவிட்டு திரும்பி வந்தபோது பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர்டிசில்வா அவரைக் கட்டிப்பிடித்துள்ளார்.

மேலும் அலிஸ்டர்டிசில்வா, அந்த மாணவனின் உள்ளாடைக்குள் கையை விட்டு அந்தரங்க பகுதிகளை தொட்டுப் பார்த்துள்ளார். அதன் பிறகு அலிஸ்டர்டிசில்வா, அந்த மாணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவன் தனது தோழியிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய தோழியின் பெற்றோர் மூலம் இந்த தகவல் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்துக்கும், அந்த மாணவனின் பெற்றோர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி அலிஸ்டர்டிசில்வாவை பணி நீக்கம் செய்தது. மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் உதகை நகர டிஎஸ்பி-யான பி.யசோதா உத்தரவின் பேரில், உதகை மகளிர் ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அலிஸ்டர்டிசில்வாவை கைது செய்தனர். பிரபல தனியார் பள்ளியில் மாணவனுக்கு விடுதி காப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.