மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சாகும் வரை சிறை: மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்பாஸ்

மதுரை: சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பெயிண்டர் அப்பாஸ். இவரது மனைவி கார்மெண்ட் வேலைக்கு செல்கிறார். இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். மகன் சென்னையில் தங்கி படிக்கிறார். மகள் ஜெய்ஹிந்த்புரம் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கிறார். அப்பாஸூக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு சென்ற பிறகு அப்பாஸ் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

அம்மாவிடம் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். கடந்த 24.11.2022-ல் மகளுக்கு அப்பாஸ் பாலியல் தொந்தரவு அளித்து வருவது சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அவர் மதுரை நகர் அனைத்து மகளின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அப்பாஸை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.முத்துகுமாரவேல் விசாரித்து, அப்பாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் சாகும் வரை (இயற்கையாக மரணம் அடையும் வரை) சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.