புதுச்சேரி: அமைச்சருக்குச் சொந்தமான இடத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6 டன் சந்தன துகள்கள், கட்டைகள் பறிமுதல் 


புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6 டன் சந்தன துகள்கள் மற்றும் கட்டைகளை சேலம் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சேலத்தில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சந்தனக் கட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து 1.50 டன் எடையுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான சந்தனக் கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சந்தனக் கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வக்குமரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று சம்பந்தப்பட்ட புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாயக்கால் கிராமத்தில் உள்ள அந்த வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக 156 பைகளில் சந்தன கட்டைகள், சந்தன துகள்கள் மற்றும் சில பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அதற்குண்டான உரிய ஆவணங்கள் இல்லை. இதன் பின்னர் அந்த தனியார் நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வனத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அங்கு தமிழக வனத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், பதுக்கி வைக்கப்பட்ட சந்தன துகள்கள், கட்டைகள் 6 டன் எடை கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனத் துகள்கள், கட்டைகளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பறிமுதல் செய்தனர். அவற்றை சேலம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையையும் தமிழக வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகே பதுக்கி வைக்கப்பட்ட சந்தன கட்டைகளின் மதிப்பு என்ன? இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த விசாரணை சரியான திசையில் சென்றால் சந்தனக் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளின் தலைகள் உருளும் என தெரிகிறது.