பாஜக மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம், பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், ஏ.பி.முருகானந்தம், பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

ஆட்டின் தலையை வெட்டி... ‘கிருஷ்ணகிரி அருகே சாலையில் ஒர் ஆட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை அணிவித்து, அந்தஆட்டின் தலையை சிலர் வெட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக எனது கண்டனத்தை கடந்த 7-ம் தேதி முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அப்போது, தேவராஜ் என்ற பெயரில் ஒருவர், முகநூல் பக்கத்தில் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

மேலும், எனது கழுத்தை வெட்டிகொலை செய்து விடுவதாக மிரட்டி, முகநூல் ஐடி வாயிலாக தேவராஜ் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, தேவராஜ் என்ற பெயரில் முகநூல் ஐ.டி.யை இயக்கி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.