நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை மீது நீதிபதி அதிருப்தி


மதுரை: நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.42 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக காயத்ரி, சுந்தரம்மாள், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 3 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை ஓய்வு பெறும் நிலையில் உள்ள சார்பு ஆய்வாளர் விசாரித்து வருகிறார். விருதுநகர் குற்றப்பிரிவில் ஆய்வாளர் இருக்கிறாரா? இந்த வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு தெரியுமா? இந்த மோசடி வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை. எனவே, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு ஏன் மாற்றக்கூடாது?'' என கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.