சேலம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழப்பு


சேலம்/சென்னை: சேலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்துமோதியதில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம் அயோத்தியாபட்டணம் பூவனூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி லட்சுமணன் (35). இவரது மனைவி வேதவள்ளி(26), மகன்கள் சின்னதுரை(7), திலீப்(4). வேதவள்ளியின் சகோதரி மகள் தர்ஷிகா (4). இவர்கள் 5 பேரும் இருசக்கர வாகனத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நில அளவையர் முருகன் (30), அவரது மனைவிநந்தினி (25), மகன் கவின் (1) ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அரூர் சாலையில் சுக்கம்பட்டிஅருகே சென்றபோது, அவ்வழியே வந்த தனியார் நகரப் பேருந்து 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இதில் வேதவள்ளி, முருகன், நந்தினி, கவின் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த லட்சுமணன், தர்ஷிகா, சின்னதுரை, திலீப் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், பேருந்து பயணிகள் 12 பேரும் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தர்ஷிகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக வீராணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

முதல்வர் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சேலம்அருகே நேரிட்ட சாலை விபத்தில்உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.